மத்திய அரசு, முதன் முறையாக, நான்கு பிராந்திய கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புற சிறு விவசாயிகள், வேளாண் கூலித் தொழிலாளர்கள், பெண்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு, கடன் உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் நோக்கில், பிராந்திய கிராமப்புற வங்கிகள் உருவாக்கப்பட்டன. உத்தர பிரதேச மாநிலம், முராதாபாத் மாவட்டத்தில், 1975, அக்., 2ல், ‘பிரதமா பேங்க்’ என்ற முதல் கிராம வங்கி துவக்கப்பட்டது. இதையடுத்து, 2005 மார்ச் வரை, 196 கிராம வங்கிகள் துவக்கப்பட்டன.அதன் பின், இணைப்பு நடவடிக்கைகள் காரணமாக, வங்கிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது, 56 ஆக உள்ளது. இவை, 4.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டுள்ளன. இவற்றில், 50 வங்கிகள் லாபகரமாக இயங்கி வருகின்றன. இந்த கிராம வங்கிகளில், மத்திய, மாநில அரசுகள், ‘ஸ்பான்சர்’ வங்கிகள் ஆகியவற்றின் பங்கு மூலதனம், முறையே, 50, 35 மற்றும் 15 சதவீதமாக உள்ளது. ‘இவ்வங்கிகளின் நிதியாதாரத்தை பெருக்கி, கிராமப்புற மக்களுக்கு மேலும் மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், அவற்றின் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும்’ என, நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நல்ல நிதிவளத்துடன், நவீன தொழில்நுட்ப வசதியுள்ள, நான்கு கிராம வங்கிகளை, மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிராந்திய கிராமப்புற வங்கிகளின் பங்கு வெளியீடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்கும் பணி முடிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் வகையறா, பங்கு ஒதுக்கீடு குறித்த அம்சங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகம், நிதியாதாரம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், நான்கு கிராமப்புற வங்கிகள், பங்கு வெளியீட்டிற்கு தேர்வாகியுள்ளன. புதிய பங்கு வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். பங்கு வெளியீட்டிற்கு பின்னரும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் இதர வங்கிகளின் பங்கு மூலதனம், 51 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும். அதனால், பிராந்திய கிராம வங்கிகள் மீதான மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில், மாற்றம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். பல்லவன் – பாண்டியன்:
தமிழகத்தில், பல்லவன், பாண்டியன் என, இரு பிராந்திய கிராம வங்கிகள் உள்ளன. சேலத்தில் தலைமையகத்தை கொண்ட, பல்லவன் கிராம வங்கி, 15 மாவட்டங்களில், 256 கிளைகளுடன் இயங்குகிறது. இதன், ‘ஸ்பான்சர்’ வங்கியாக, இந்தியன் பேங்க் உள்ளது. பாண்டியன் வங்கியின் தலைமை அலுவலகம், விருதுநகரில் உள்ளது. இவ்வங்கி, 16 மாவட்டங்களில், 327 கிளைகள் மூலம், சிறு விவசாயிகள், கைவினைஞர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதிச் சேவை வழங்குகிறது. இவ்வங்கியில், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், 15 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது.
(Source: Dinamalar)