தோழர்களே!
Manager's Meeting என்ற பெயரில் நம் கிளை மேலாளர்களை வரவழைத்து மிக மோசமான வார்த்தைகளில் பேசி மிரட்டுவதை தொடர் பணியாக பொதுமேலாளர் குலோத்துங்கன் அவர்கள் மேற்கொண்டு வருவதாக அறிகிறோம். இதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது ஒரு அரசு நிறுவனம் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இது அவரின் தனிப்பட்ட கம்பெனி அல்ல!
ஒரு வங்கியின் மேலாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என கூட தெரியாதவர்களை எப்படி பொதுமேலாளர்களாக Sponsor வங்கி அனுப்பி வைக்கிறது என புரியவில்லை?ஒருவேளை இதையே தகுதியாக கொள்கிறதோ? என அச்சப்படுகிறோம்.
இதுவரையில் தஞ்சை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி என இவர் சென்ற மண்டலங்களில் எல்லாம் நடத்திய மேலாளர்கள் சந்திப்பில் ஏதோ இவர்தான் இந்த வங்கியை தூக்கி நிறுத்தியவர் போலவும் மேலாளர்கள் எல்லாம் இவரின் விரல் அசைவுக்கு பணிய வேண்டியவர்கள் போலவும் நினைத்துக்கொண்டு அவர்களை நிற்க வைத்து பொது அவையில் மிரட்டுவதும், வேலையை விட்டு தூக்கி விடுவேன் என எச்சரிப்பதும், பெண்கள் என்றும் பாராமல் மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பதாக தெரிகிறது. இவரது இந்தப் போக்கை கண்டித்து நாம் வங்கியின் சேர்மனிடம் கடந்த மாதம் Courtesy Call சென்ற இடத்தில் சொல்லியும் இவர் தன் போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. ஆக இவர் இந்த வங்கியின் சேர்மனின் பேச்சுக்கு கூட கட்டுப்படாமல் ஒரு parallel நிர்வாகம் நடத்தி வருவதாகவே நமக்கு புரிகிறது.
இன்று தமிழ்நாடு கிராம வங்கி இந்த நிலையில் இருக்கிறது என்றால் அது நம் தோழர்களின் உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது உழைப்பால் மட்டுமே நிறுவப்பட்ட இந்த வங்கியின் ஒரு செங்கல் மீது கூட Sponsor வங்கியின் அதிகாரிகள் சொந்தம் கொண்டாடி விட முடியாது.
இதுவரை இங்கு Sponsor வங்கியில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் நம் உழைப்பால் மேன்மைகள் பெற்று ஏதோ அதனை தங்கள் சாதனைகள் போல தம்பட்டம் அடித்து தங்கள் வங்கியில் பதவி உயர்வுகளும் சலுகைகளும் பெற்றுக் கொண்டு உள்ளார்களே தவிர அவர்களில் யாரும் நமக்காக எதையும் கிள்ளி கூட போட்டதில்லை.
இந்த நாற்பது ஆண்டுகளில் நாம் நம் சலுகைகளுக்காக போராடியதை விட நம் சுயமரியாதையை தக்கவைக்க நடத்திய போராட்டங்களே அதிகம்... இதுவே நம் வரலாறு!
இவர் தன் போக்கினை மாற்றிக்கொள்ளா விட்டால் தலைமை அலுவலகம் முன்பாக இவரது எதேச்சதிகார போக்கினை கண்டித்து நாம் போராட்டங்கள் நடத்த வேண்டி வரும் என எச்சரிக்கிறோம்.
இந்த வங்கி எங்கள் வங்கி... எங்கள் உழைப்பால் உருவாக்கிய வங்கி! உங்கள் அதிகாரத்துக்கு அஞ்சி எங்கள் ஒருதுளி வியர்வை கூட சுரக்காது. அதிகாரம் தான் இனி உங்கள் வழியென்றால் போராட்டங்களே அதற்கு பதிலாக இருக்கும்! ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும். நாங்கள் கூரானவர்கள்!
தோழமையோடு,
அறிவுடைநம்பி
GS-TNGBOA
Tets